- Get link
- Other Apps
மய்யித்தை பார்க்க போகும்போது, மய்யித் நம் வீட்டில் இருக்கும்போது இஸ்லாம் முறைப்படி மய்யித்தின் சட்டம் பற்றி விளக்கவும்.
- Get link
- Other Apps
கேள்வி 🌷
மய்யித்தை பார்க்க போகும்போது, மய்யித் நம் வீட்டில் இருக்கும்போது இஸ்லாம் முறைப்படி மய்யித்தின் சட்டம் பற்றி விளக்கவும்.
🍀பதில்🍀
உலகில் ஓரிறை கொள்கையை உடையவர்கள்,பல கடவுள் கொள்கை உடையவர்கள் ஏன்?கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் கூட ஏற்கும் ஒரு விஷயம் “மரணம்”ஆகும்.
மய்யித்தை பார்க்கபோகும்போது,நாம் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கத்தி,கூச்சல் போட்டு ஒப்பாரி வைக்கக்கூடாது.
அழுவதற்கு மார்க்கம் தடுக்கவில்லை ஆனால் அங்கு ஒப்பாரி வைப்பது இஸ்லாம் தடுத்துள்ளது.
இறந்தவர்களது நல்ல செயல்களை மட்டுமே மய்யித் வீட்டில் பேசவேண்டும்.அவர்கள் செய்த தவறான செயல்கள் பற்றி அங்கு பேசக்கூடாது.
அவரவர் செய்தவற்றின் பலன் அல்லாஹ்விடத்தில் சென்றடைந்து விட்டது.
துக்கம் என்பது இறந்தவரின் மனைவியை தவிர மற்ற உறவினர்களுக்கு 3 நாட்கள் மட்டும்தான். இதை தவிர்த்து 3ஆம் நாள் ஃபாத்திஹா, 7 ஆம் நாள் ஃபாத்திஹா, 40 ஆம் நாள் ஃபாத்திஹா என்றெல்லாம் கிடையாது.
இது மாற்றுமத கலாச்சாரமாகும்.
இறந்தவரின் வீட்டினர் துக்கத்தில் இருப்பார்கள்,எனவே அவர்கள் நம்மால் இயன்றவரை அவர்களது தண்ணீர் தேவை,உணவு தேவைகளை கவனிக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு நாம் அங்கே போய் சாப்பிடுவதற்கு தயாராகக்கூடாது.
இறந்தவர்களுக்காக நாம் பாவமன்னிப்பு அதிகமதிகம் கேட்கவேண்டும்.
ஜனாஸா நம் வீட்டில் இருக்கும்போது…
ஜனாஸாவை முறையாக நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி குளிப்பாட்டவேண்டும்.
ஆணுக்கு ஆண்களும், பெண்ணுக்கு பெண்ணும் தான் குளிப்பாட்ட வேண்டும்.
மனைவி கணவன் உடலையும்,கணவன் மனைவி உடலையும் குளிப்பாட்ட மார்க்கத்தில் அனுமதி உண்டு.
குளிக்க வைக்கும்போது நாம் உயிருடன் இருக்கும்போது எந்த சூட்டில் குளிப்போமோ அந்த இளம் சுடுநீரில் ஜனாஸா தூய்மையாகும் வரை,3 அல்லது ஐந்து முறை சுத்தப்படுத்த வேண்டும். அதை விடுத்து மிக சூடான,மிக குளிர்ந்த நீர் கொண்டு குளிப்பாட்டுதல் கூடாது. சில இடங்களில் 10,20 வாளி தண்ணீர் கொண்டு உறவினர்கள் அத்தனை பேரையும் அழைத்து ஒவ்வொருவராக தண்ணீர் ஊற்ற சொல்லுவது நடக்கிறது, இதை தவிர்க்க வேண்டும்.,
ஜனாஸாவை மிகவும் மென்மையாக,அனைத்து உறுப்புகளையும் சுத்தமாக அழகான முறையில் குளிப்பாட்ட வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி கஃபனிட வேண்டும்.
மய்யித்தை ஒருநாள், இரண்டு நாள் என அதை கஷ்டப்படுத்தாமல் விரைவாக அடக்கம் செய்யவேண்டும்.
சுற்றிலும் உட்கார்ந்து குரான் ஓதுவதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது, இது பற்றி சிந்தித்தோமேயானால் நாம் ஓதுயதின் நன்மை நமக்குத்தாம் சேரும்,இறந்தவரை சென்றடையாது. நம் பிரார்த்தனைதான் அவர்களுக்கு அல்லாஹ் நாடினால் கிடைக்கும். அதனால் அதிகமதிகம் அவர்களுக்காக மறுமைக்கான நற்பலன் கிடைக்கவும்,அவர்களது பாவமன்னிப்பிற்காகவும் துவா செய்யவேண்டும்.
உயிருடன் இருப்பவர்கள் மரணத்தை ஒவ்வொரு நிமிடமும் எதிர்நோக்கி நன்மையான காரியங்களில் ஈடுபடுவோமாக!! இன்ஷா அல்லாஹ்
📚📖ஆதாரங்கள்
📙1255. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்களின் மகளைக் குளிப்பாட்டும்போது, “அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்யவேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பியுங்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்
📙1271. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்கள் மூன்று வெண்ணிறப் பகுதி ஆடைகளால் கஃபனிடப்பட்டார்கள்: அவற்றில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்
1314. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.” அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்
📙ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு ‘ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 2725, அஹ்மத் 1660, திர்மிதி 919, இப்னுமாஜா 1599
📙ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ‘நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். திருக்குர்ஆன் 2.155, 156, 157
பாவமன்னிப்புத் தேடல்
மரணச் செய்தி நம்மிடம் கூறப்பட்டால் ‘அவரை அல்லாஹ் மன்னிக்கட்டுமாக!’ என்று அவருக்காக உடனே துஆச் செய்ய வேண்டும்.
📙அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1328
📙ஸைத் (ரலி), ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோரின் மரணச் செய்தியை மக்களுக்கு நபிகள் நாயகம் அறிவித்த போது ‘அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்’ எனக் கூறியுள்ளனர்.
நூல்: அஹ்மத் 21509
📙’இறந்தவர்களை நீங்கள் ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் செய்ததை (அதன் பயனை) அவர்கள் அடைந்து விட்டனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1393, 6516
📙நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணத்தை நெருங்கிய போது நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவ்ஃபின் மகனே! இது இரக்க உணர்வு’ என்று கூறி விட்டு வேறு வார்த்தையில் பின் வருமாறு விளக்கினார்கள். ‘கண்கள் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் கவலைப்படுகிறது; நமது இறைவன் பொருந்திக் கொள்ளாத எதையும் நாம் கூற மாட்டோம். இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1303
📙நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுததற்கும் மற்றவர்கள் அழுத போது அதைத் தடுக்காமல் இருந்ததற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. (பார்க்க புகாரி 3063, 1288, 1244, 1293)
📙இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். கணவரைத் தவிர. கணவர் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்தலாம்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 313, 5341, 5343
Comments
Post a Comment